திருக்குறள்

புதன், 28 ஆகஸ்ட், 2013

பித்த வெடிப்பு

பித்த வெடிப்பு

பெண்கள் தங்கள் முகத்தை பராமரிக்க செலவிடும் நேரத்தில் சில நிமிடங்கள் கூட, தங்கள் பாதங்களை கவனிக்க செலவு செய்வதில்லை. பெரும்பான்மையான பெண்களுக்கு பாதங்களில் ஏற்படும் பிரச்னை பித்த வெடிப்பு. என்ன மருந்து போட்டாலும், இந்த பித்த வெடிப்பு மட்டும் போகவே மாட்டேங்குது என்று அலுத்துக் கொள்பவர்கள் ஏராளம்.

பித்தவெடிப்பு போவதற்கான டிப்ஸ் இதோ உங்களுக்காக…

* மருதாணி இலைகளை நன்றாக அரைத்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட வேண்டும். பின், தண்ணீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.

* கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடுபடுத்தி, அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது நேரம் வைத்திருந்து, பின், பாதத்தை ஸ்கிரப்பர் போன்ற சொரசொரப்பானவற்றால் தேய்த்து கழுவினால் பாதத்தில் காணப்படும் கெட்ட செல்கள் உதிர்ந்து விடும். இதனால் பித்த வெடிப்பு ஏற்படுவதும் தவிர்க்கப் படுவதோடு, பாதம் மென்மையாகவும் இருக்கும்.

* வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால், பித்த வெடிப்பு நீங்கும்.

* தரம் குறைவான காலணிகளைப் பயன்படுத்துவதாலும், சிலருக்கு பித்த வெடிப்பு ஏற்படும். எனவே காலணிகளை வாங்கும் போது, விலை மற்றும் டிசைனை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், தரமானது தானா என்பதை கவனித்து வாங்குவது நல்லது.

* வேப்ப எண்ணெயில், சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவினால், பித்த வெடிப்பு குணமாகும்.

* இரவு நேரத்தில் தூங்க போவதற்கு முன், காலை நன்றாக தேய்த்து கழுவி, சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து தூங்கப் போகலாம். இப்படி செய்தால் பித்த வெடிப்பு வராமல் தடுக்கலாம்.

* குளித்து முடித்ததும், பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும். பின், பாதத்தில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் வெடிப்பு வராமல் தடுக்கலாம்…..

தசை தளர்வை நீக்கும் சீமைச்சாமந்தி.!

தசை தளர்வை நீக்கும் சீமைச்சாமந்தி.!
குட்டையான செடியில் பூக்கும் மலர்களைக் கொண்ட சீமைச்சாமந்தி(Chamomile) மருந்திற்கு பெரிதும் பயன்படுகிறது.. புதிய மற்றும் உலர்ந்த சீமைச்சாமந்தியின் பூக்கள் தேநீர் தயாரிக்கும் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இது பல்வேறு சுகாதார நலன்களை கொண்டுள்ளது.

டீ வகைகளில் ஒன்றான சீமைச்சாமந்தி ஃப்ளேவரில் விற்கப்படும் டீயை போட்டப் பின்பு ,அதன் இலைகளை, தழும்பு உள்ள இடத்தில் வைத்து மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால், தழும்புகள் மறைந்துவிடும்.

சீமைச்சாமந்தியின் பூக்களில் தயாரிக்கப்படும் தேநீர் தசை தளர்வை நீக்கவும், மனதை ஆறுதல் படுத்தவும் உதவுகிறது. சீமைச்சாமந்தியின் தேநீர் தூக்கம் வராமல் அவதிபடுபவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் இப்பூக்களின் தேநீரை தினசரி எடுத்துக்கொண்டால் சர்க்கரையின் அளவை சமநிலையில் வைத்துக்கொள்ள முடியும்.

இதில் ஆக்ஸிஜனேற்ற பொருட்களை அதிகளவில் கொண்டுள்ளது. சீமைச்சாமந்தியின் தேநீர் அழற்சி விளைவித்தலுக்கு எதிரான முகவர் மற்றும் இயற்கையாக பாக்டீரியாவை எதிர்க்கும் சக்திகளை கொண்டுள்ளது. தேநீர் உடலில் உள்ள நச்சுக்களை அகற்றி உடலை தூய்மையாக வைத்துக்கொள்ள உதவுகிறது. வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் தீரும்.

குளிர்ந்த அல்லது சூடான நிலையிலும் தேநீர் செய்து நீங்கள் பருகலாம். நீங்கள் சுவையுடன் இருக்க வேண்டும் என விரும்பினால் தேநீருடன் தேன் அல்லது எலுமிச்சை பழத்தை சேர்த்துக்கொள்ளலாம். இது உடலுக்கு ஆரோக்கியமானதாக இருந்தாலும் ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று கப் தேநீர் பருகுவதே ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

சீமைச்சாமந்தியின் தேநீரை கர்ப்பிணிபெண்கள் சாப்பிடக்கூடாது. ஏனெனில் இதில் காஃபின் கலந்திருப்பதால் கர்ப்பிணியின் கர்ப்பபையை சுருக்கும் வேலையை தேநீர் தூண்டுகிறது. ஆதலால் இது கர்ப்பிணிகளின் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல. மேலும் ஆஸ்துமா, அலர்ஜி, மற்றும் உணர்வு திறனை ஏற்படுத்தும் தோலை கொண்டவர்கள் தேநீர் மற்றும் மலர்களைக்கூட சுவாசிக்ககூடாது.

நெல்லிக்காய் சாப்பிடுங்க இளமையா இருங்க!

நெல்லிக்காய் சாப்பிடுங்க இளமையா இருங்க

நீண்டகாலம் வாழ்ந்து, அவ்வையார் தமிழுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற நோக்கில், தனக்கு கிடைத்த அரிய வகை நெல்லிக்கனியை, அவ்வையாருக்கு மன்னர் அதியமான் கொடுத்ததாக வரலாறு உண்டு. இவ்வளவு சிறப்பும், பயனும் உள்ள நெல்லிக்காயில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. வைட்டமின் - சி அதிகம் உள்ள இந்த நெல்லிகாய் உடலுக்கு எனர்ஜியை தரக்கூடியது.

நோய் எதிர்ப்பு சக்தி உடையது. சர்க்கரை நோயாளிகள் நெல்லிக்கனியை தொடர்ந்து சாப்பிடலாம். கால்சியம், இரும்பு சத்துள்ள இந்த நெல்லிகாய் தலைமுடியை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

தலைமுடி வேர்கள் வலுவாக இருக்க உதவுகிறது. முடி உதிர்வதை தடுக்கிறது. இதயம் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி உடைய இந்த நெல்லிக்காய் பார்வை குறைபாடு ஏற்படாமல் கண்களை பாதுகாக்கிறது. வயிற்றுபோக்கு ஏற்படாமல் தடுக்கிறது.

இதுபோன்ற பல்வேறு நன்மைகளை உடைய இந்த நெல்லிக்காய், முதுமையை தடுத்து நம்மை இளைமையாக வைத்திருக்க உதவுகிறது. ஏராளமான பயன்களை கொண்ட நெல்லிக்காய், தாராளமாக கிடைக்க கூடியது. எனவே, நீங்களும் நெல்லிக்காயை விரும்பி சாப்பிடலாமே.

ரத்தத்தை சுத்தப்படுத்தும் கரிசலாங்கண்ணி.!

ரத்தத்தை சுத்தப்படுத்தும் கரிசலாங்கண்ணி.!

இரத்தத்தில் இரும்புச்சத்து குறைவதால் இரத்தத்தில் உள்ள நீர்த்தன்மை வற்றிப்போகிறது. இதனால் இரத்தம் பசைத்தன்மையடைகிறது. இதனால் இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுகிறது. 

இவற்றை அகற்றி இரத்தத்தை சுத்தப்படுத்தி இரத்தத்தில் நீர்த்தன்மையை உண்டாக்குவற்கு கரிசலாங்கண்ணி கீரையை சூப் செய்து அருந்தலாம். அல்லது காயவைத்த பொடியை பாலில் கலந்தோ, தேன் கலந்தோ சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாவதுடன் உடலும் வலுப்பெறும். கரிசலாங்கண்ணி உடலுக்கு ஆரோக்கியத்தையும் புத்துணர்வையும் தருவதால் இதற்கு மரணமாற்று மூலிகை என்ற பெயரும் உண்டு.

கரிசலாங்கண்ணி நரம்புத்தளர்வை போக்கும். மூளை நரம்புகளை தூண்டி புத்துணர்வு பெறச் செய்யும். ஆஸ்துமா, இருமல், ஈளை போன்ற பாதிப்பு கொண்டவர்கள் கரிசலாங்கண்ணி பொடியுடன் திப்பிலி சூரணம் சேர்த்து தினமும் ஒருவேளை என ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் சுவாச காச நோய்கள் தீருவதுடன் சுவாசம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் தீரும்.

இதய அடைப்பை நீக்கி இதயத்தை சீராக செயல்பட வைக்கும். மண்ணீரல், சிறுநீரகத்தைப் பலப்படுத்தும் தன்மை கரிசாலைக்கு உண்டு. குழந்தைகளுக்கு உண்டாகும் மந்த நோய்களைப் போக்கும். கண்பார்வையை தெளிவுபெறச் செய்யும். கண் நரம்பு படலங்களில் உள்ள நீரை மாற்றி பார்வை நரம்புகளை பலப்படுத்தும் கண் வறட்சியைப் போக்கும். கிட்டப்பார்வை, தூரப்பார்வை போன்றவற்றை குணமாக்கும்.

தொப்பையைக் குறைக்க தினமும் கரிசலாங்கண்ணி, தும்பை இலை, கீழாநெல்லி சேர்த்து கஷாயம் செய்து அருந்தலாம். இதன்மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்பட்டு தொப்பை குறையும். கரிசலாங்கண்ணி இலையை நீர் விடாமல் சாறு எடுத்து அதை சோப்பு போடப்படாத வெள்ளைத் துணியில் நனைத்து நிழலில் உலர்த்தி, சுருட்டி திரியாக்கி சுத்தமான நெய் விளக்கில் எரித்தால் கருப்பு பொடியாக வரும். இதையே “கண் மை” ஆக நம் முன்னோர்கள் உபயோகித்தனர்.

இதனால் கண்கள் பிரகாசமாக ஆவதுடன், கண்கள் குளிர்ச்சி அடைந்து முகப்பொலிவு உண்டாகும். இது பழங்கால பாட்டி சொன்ன வைத்தியமாகும்

மருத்துவ பயன் நிறைந்த மாவிலங்கு.!

மருத்துவ பயன் நிறைந்த மாவிலங்கு.!

மாவிலங்கு தாவரத்தில் சபோனின்கள், பிளேவனாய்டுகள், தாவரஸ்டீரால்கள் மற்றும் குளுக்கோசிலினேட்டுகள் காணப்படுகின்றன. இவற்றுள் ரூட்டின், சிட்டோஸ்டிரால், பெட்டுலினிக் அமிலம், குளுக்கோகப்பாரின், கெடா பிசைன் போன்றவை காணப்படுகின்றன.

மாவிலங்கப் பட்டை ஆஸ்துமா, மூச்சுக்குழல் அலற்சி, மற்றும் தோல் வியாதிகளை குணப்படுத்தும். மேலும் காய்ச்சல் வயிற்று எரிச்சல், வாந்தி ஆகியவற்றினையும் போக்கும். மூட்டுக்களின் வீக்கம் மற்றும் புண் போக்க பசுமை இலைகள் உதவுகின்றன. கசக்கிய இலைகளை வினிகர் சேர்த்து பயன்படுத்துவர்.

குளிர்காலத்தில் பனிக்காற்று தாக்குவதினால் ஏராளமானோர் முகவாத நோயினால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு மாவிலங்கம் அருமருந்தாகும். மாவிலங்கு மரப்பட்டை, மூக்கிரட்டைப் பட்டை வேர், வெள்ளைச் சாரணை வேர் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து நன்கு இடித்து முதல் நாள் இரவில் 250 மில்லி தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அதை கொதிக்க வைக்க வேண்டும். 50 மில்லி அளவு வரும் வரை கொதிக்க வைத்து இறக்கி, ஆற வைத்து வடிகட்ட வேண்டும். இதனுடன் 60மில்லி கிராம் 'நண்டுகல் பஷ்பம்' சேர்க்க வேண்டும்.

தினமும் பல் துலக்கியதும், இதை அருந்தி வர இரண்டு, மூன்று மாதங்களில் நிரந்தர குணம் ஏற்படும். சர்க்கரை நோயாளிகளை துன்புறுத்தும் பிரச்சினை 'தோள்பட்டை உறைவு'. இந்த நோய்க்கான காரணம் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் இந்தப் பிரச்சினையையும் மாவிலங்கம், மூக்கிரட்டை, வெள்ளைச் சாரணை வேர், நண்டுகல் பஷ்பம் மூலம் இரண்டு மாதங்களில் குணப்படுத்த முடியும்.

சிறுநீரகக் கற்களை நீக்க மேலை நாடுகளிலும், இந்தியாவிலும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. சிறுநீருடனேயே கல் வெளிவருவது போன்று உதவுகிறது. இன்றைய நவீன ஆய்வுகள் இதனை நிரூபித்துள்ளன. சிறுநீர்ப்பையில் வீக்கம், சிறுநீர்க்குழாய் அடைப்பு மற்றும் இனபெருக்க உறுப்புடனான சுரப்பியில் அதிக வளர்ச்சியினால் ஏற்படும் சிறுநீரக கோளாறுகளை குணப்படுத்துகிறது.

ஆரோக்கியத்தில் சிறந்தது லவங்கம்..!

ஆரோக்கியத்தில் சிறந்தது லவங்கம்..!

சைவம், அசைவம் என இரண்டு வகை சமையலிலும் மணக்கும் லவங்கப் பட்டைக்கு எப்போதும் முதலிடம் தான். பட்டையை பொடி செய்து வைத்து தாளிப்பது மற்றும் அரைப்பதில் சேர்க்கலாம். உடல் ஆரோக்யத்திலும் லவங்கப் பட்டையின் பங்கு முக்கியமானது என்கின்றனர் சித்த மருத்துவர்கள். லவங்கப் பட்டை 100 கிராம், மிளகு, திப்பிலி ஆகியவை தலா 10 கிராம் எடுத்து பொடி செய்து கொள்ளவும்.

காலை வெறும் வயிற்றில் இரண்டு கிராம் அளவு தேனில் கலந்து சாப்பிட்டால், நுரையீரல் சார்ந்த கோளாறுகள், சளி மற்றும் தலைபாரம் உள்ளிட்ட பிரச்னைகள் குணமாகும். லவங்கப் பட்டையுடன் சுக்கு, ஓமம் மூன்றும் தலா 50 கிராம் அளவுக்கு எடுத்து பொடி செய்து கொள்ளவும். இதில் இரண்டு கிராம் எடுத்து காலை, மாலை உணவுக்கு பின்னர் சாப்பிட்டால் அனைத்து விதமான வாயுக் கோளாறுகளும் நீங்கும்.

லவங்கப்பட்டை, நிலவேம்பு இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துக் கொள்ளவும். இதில் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டால் பூச்சிக் கடிகள் குணமாகும். இருமல் பிரச்னை உள்ளவர்கள் லவங்கப்பட்டையுடன் அக்காரா மற்றும் திப்பிலி மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்து அரை ஸ்பூன் அளவுக்கு தேனில் கலந்து சாப்பிட்டால் இரைப்பு மற்றும் இருமல் விலகும். லவங்கப்பட்டையுடன், அதிவிடயம் சம அளவில் எடுத்து பொடி செய்து கொள்ளவும்.

இதில் ஐந்து கிராம் அளவு பொடியை அரை லிட்டர் தண்ணீரில் போட்டு பாதியாக சுண்டும் வரை காய்ச்சிக் குடித்தால் மாதவிலக்கின் போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கு கட்டுப்படும். லவங்கப் பட்டையுடன், மாம்பருப்பு, கசகசா இம்மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து கொள்ளவும். இதில் ஐந்து கிராம் பொடியை 100 மிலி தயிரில் கலந்து சாப்பிட்டால் பேதி குணமாகும். லவங்கப்பட்டை, சுக்கு, ஏலக்காய் மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து கொள்ளவும்.

இதில் இரண்டு கிராம் அளவுக்கு எடுத்து பொடி செய்து மோரில் கலந்து சாப்பிட்டால் வயிற்று வலி தீரும். லவங்கப் பட்டையை பொடி செய்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கின் போது அதிக ரத்தப் போக்கு ஏற்படுவது நிற்கும். லவங்கப் பட்டையுடன் சிறு குறிஞ்சான் சம அளவு எடுத்து தினமும் இரு வேளை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குணமாகும் என்கின்றனர் சித்த மருத்துவர்கள்.