மஞ்சள் காமாலை ஆபத்தான நோய்களில் ஒன்று. கல்லீரலில் ஏற்படும் வைரஸ் தொற்றால் இந்நோய் ஏற்படுகிறது.
ரத்தம் மற்றும் உடலுறவு மூலம் இந்த வைரஸ் ஏற்பட வாய்ப்புள்ளது. கல்லீரல் அழற்சி வைரஸ் ஏ என்ற வைரசே கல்லீரலை தாக்கி மஞ்சள் காமாலையை உருவாக்குகிறது. இது குழந்தைகள் மற்றும் சிறுவர்களை எளிதில் தாக்கும்.
சுகாதாரமற்ற குடிநீர், உணவின் வழியாக இந்த வைரஸ் உடலுக்குள் நுழைகிறது. இந்த வைரஸ் உடலுக்குள் நுழைந்த ஒன்று அல்லது இரண்டாவது வாரத்தில் மஞ்சள் காமாலை தோன்றுகிறது. நோய்த் தொற்று ஏற்பட்டவர்களுக்கு காய்ச்சல், உடல் அசதி, பசியின்மை, உடல் வலி, சோர்வு, மூட்டு வலி போன்ற அறிகுறிகள் தென்படும்.
கண்களின் வெள்ளைப் பகுதி மஞ்சளாக காட்சியளிக்கும், சிறுநீரும் மஞ்சள் நிறத்தில் போகும். மேலும் சிறுநீர் வெளியேற்றுவதிலும் சிரமங்கள் ஏற்படும். கல்லீரல் அழற்சியின் அடுத்தகட்டமாக கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீங்கி பெரிதாகும். இத்துடன் நிணநீர்க்கட்டிகளிலும் வீக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ரத்தப் பரிசோதனையின் மூலம் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்படுகிறது. இந்த வைரசுக்கு எதிரான எதிர்ப்பாற்றல் புரதத்தின் அளவு ரத்தத்தில் அதிகரித்திருப்பதை வைத்து மஞ்சள் காமாலை நோயின் தாக்கத்தை அறிந்து கொள்ளலாம்.
மஞ்சள் காமாலை என்று தெரிந்த உடன் முறையான சிகிச்சை மற்றும் பத்தியம் மேற்கொள்வது அவசியம். உணவுக் கட்டுப்பாட்டை நோய் முழுமையான குணமடையும் வரை கடைபிடிக்க வேண்டும்.
உணவுமுறை: கொழுப்புச்சத்து நிறைந்த வெண்ணைய், நெய், எண்ணைய் பொருட்கள் நிறைந்த உணவுப் பண்டங்களை சாப்பிடக்கூடாது. மிகுந்த காரமான உணவு, ஊறுகாய், அப்பளம் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
தேவையற்ற மாத்திரை எடுக்கக் கூடாது, காபி, டீ மற்றும் அசைவ உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். கர்ப்பகாலத்தில் பெண்கள் முறையாக பரிசோதனை செய்து தன்னையும் குழந்தையையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அதிகமாக குளுக்கோஸ், கரும்பு சாறு, மோர் பானங்கள் அருந்த வேண்டும்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு: கர்ப்பமுற்றிருக்கும் போது தாய்க்கு காமாலை வருவது என்பது மிக அரிதாக நடக்கக் கூடியதாயிருந்தாலும் அதனுடைய விளைவுகள் மிகவும் கடுமையானதாக தாய்க்கும் சேய்க்கும் அமைகிறது.
வைரஸ் கிருமியால் ஏற்படும் மஞ்சள் காமாலை மிகவும் மோசமான விளைவுகளை தாய்க்கும் சேய்க்கும் ஏற்படுத்துகிறது. ஹெபடிடிஸ் ஜி.பி. என்னும் வைரஸ் கிருமியால் மஞ்சள் காமாலை ஏற்படுகிறது.
கர்ப்பிணி பெண்களுக்கு சரியான அளவில் நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து கிடைக்கக்கூடிய அளவில் உணவுகளைக் கொடுத்து பராமரிக்க வேண்டும். அந்தந்த வைரஸ் கிருமி தாக்குதலுக்கு தக்க தடுப்பூசி மற்றும் இம்முனோகுளோபுலின் கொடுக்கப்பட வேண்டும்.
பாதுகாப்பு முறை: மஞ்சள் காமாலை நோய் தொற்று ஏற்படுவதை தவிர்க்க சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
சுகாதாரமற்ற இடங்களில் விற்கும் குளிர்பானம், உணவு வகைகளை உண்பதையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். குழந்தைப் பருவத்தில் மஞ்சள் காமாலை தடுப்பூசி போடுவதன் மூலம் நோய் ஏற்படுவதை தடுக்கலாம்.
சுகாதாரமான கழிப்பிடத்தை பயன்படுத்த வேண்டும். தண்ணீர், பால் போன்றவற்றை நன்றாக கொதிக்க வைத்து வடிக்கட்டி பிறகு குடிக்கலாம். கல்லீரல் பாதிப்பு நோய் உள்ளவர்கள் மது அருந்தும் பழக்கத்தை கண்டிப்பாக விட்டு விட வேண்டும். கல்லீரல் பாதிப்பு ஏற்படுத்தும் மருந்துகளை தவிர்க்க வேண்டியது அவசியம்.
நோய் முற்றிலும் குணமடையும் வரை மருத்துவரின் ஆலோசனைப்படி மூலிகை மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.